தந்தை மகன் கொலை வழக்கில் 5-வது நபராக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மொத்தம் 4 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்.
ஆனால் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இதைனைத்தொடர்ந்து நள்ளிரவில் தீவிர தேடுதலுக்கு பிறகு பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த இரட்டை கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் 5ஆவது நபராக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரையும் சிபிசிஐடி கைது செய்துள்ளது.