உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை மற்றும் ஐந்து பேரின் தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு எனும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை விரிவாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அனிருத்தா போஸ் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை விரிவாக பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். விசாரணையில் இடைவெளி இருப்பதாகவும், கவுசல்யாவின் உறவினர்களை குற்றவாளியாக்குவதற்கான ஆதாரங்கள் இல்லாததாகவும் கூறிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கவுசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட உடுமலை சங்கரை கூலிப்படையை ஏவி படு கொலை செய்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் தூக்குத் தண்டணை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உத்தரவிட்டது. மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டணையாகவும் குறைக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.