சென்னையில் 40 லட்சம் ரூபாய் கடனுக்காக மணல் வியாபாரியைக் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் செய்யது முகமது புகாரி. மணல் வியாபாரியான இவர் சென்னை அருகே மண்ணடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவருடன் தங்கியிருந்த திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரையும் அடையாளம் தெரியாத சிலர் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் இரண்டு பேரின் செல்போன் எண்களை வைத்து தீவிரமாக தேடியபோது திருவல்லிக்கேணி தசூதிகான் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி செய்யது முகமது புகாரி, ஜெயலட்சுமி ஆகியோரை மீட்டனர்.
இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் மீட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தியதில், "தென்காசியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரிடம் செய்யது முகமது புகாரி ரூ.40 லட்சம் கடனாக வாங்கி விட்டு பிறகு தலைமறைவாகி விட்டார். சாகுல் ஹமீது பல இடங்களில் புகாரியை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. திருப்பூரில் வேலை செய்து வருவதாக தெரிந்து அங்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் அங்கிருந்து செய்யது முகமது புகாரி மற்றும் அவருக்கு பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமியை அழைத்து சென்னை மண்ணடி லாட்ஜில் இருப்பதை தெரிந்து கொண்டார்.
பிறகு சாகுல் ஹமீது, தனது நண்பர்களும் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளுமான செய்யது அலீம், நிஜாமுதீன், ஹீரா ஆகியோருடன் சேர்ந்து மண்ணடி லாட்ஜில் இருந்து செய்யது புகாரி, ஜெயலட்சுமியை அடித்து உதைத்து கடத்திச் சென்று திருவல்லிக்கேணி தசூதீன்கான் தெருவில் உள்ள மற்றொரு லாட்ஜில் அடைத்தனர். பிறகு அடித்து உதைத்து பணத்தை திரும்பி தரும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.
இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார் கடத்தல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீது, இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகிகளுமான செய்யது அலீம், நிஜாமுதீன், ஹீரா ஆகியோரை கைது செய்தனர். பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.