ஓமலூர் அருகே வாடகைக்கு விட்ட கடையை அபகரிக்க முயன்ற இரண்டு பேரை கைது செய்த போலீசார், மேலும், இருவரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கோட்டமேட்டுப்பட்டி கிராமம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமுதா. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், அவரும், அவரது மாமியாரும் அண்ணாநகரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கடை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த கடையை ஓமலூர் அருகேயுள்ள தாராபுரத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வாடகைக்கு எடுத்து பட்டரை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நாங்களே கடை நடத்தப் போகிறோம் அதனால், விரைவாக கடையை காலி செய்து கொடுக்குமாறு அமுதா கூறியுள்ளார். ஆனால், கடையை காலி செய்யாமல் தகறாரு செய்ததுடன், அந்த நிலத்தை அபகரிப்பதற்காக ஓமலூர் அருகேயுள்ள அசோக்குடன் சேர்ந்து ஆர்.சி.செட்டிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வரும் தேசிய மக்கள் கழகம் நிறுவனர் சங்கரின் தூண்டுதலின் பேரில், அவரது கட்சியின் மாநில செயலாளர் அர்ஜுனன், மாநில தொண்டரணி செயலாளர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடர்ந்து தொல்லை செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அமுதா, ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் நான்குபேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து தாராபுரத்தைச் சேர்ந்த அசோக், ஆர்.சி.செட்டிபட்டியைச் சேர்ந்த மாயக்கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்த போலீசார், கட்சியின் நிறுவனர் சங்கர் மற்றும் மாநில செயலாளர் அர்ஜுனன் ஆகியோரை தேடி வருகின்றனர்.