சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனை விஷ ஊசி போட்டு கொன்றதாக தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கட்சுபள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி - சசிகலா தம்பதியினர். லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு செந்தமிழ், வண்ணத்தமிழ் என 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது மகன் வண்ணத்தமிழுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக வலது காலில் எலும்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிய நிலையில், கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் வண்ணத்தமிழ் ஓராண்டுக்கும் மேலாக படுத்த படுக்கையாக இருந்ததால் உடலில் காயம் ஏற்பட்டு சீழ் வைத்து மிகுந்த உடல் உபாதைக்கு ஆளாகி உயிருக்கு போராடி துடிதுடித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வண்ணத்தமிழ் இறந்ததாக செய்தி வெளியான நிலையில், அவரது தந்தையே விஷ ஊசி போட்டு கொன்று விட்டதாக கொங்கணாபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வண்ணத்தமிழின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரியசாமி கொங்கணாபுரம் அருகிலுள்ள இரத்தப் பரிசோதனை நடத்தி வரும் வெங்கடேசனிடம் தனது மகனின் நிலையை எடுத்துக்கூறி அவரை கருணை கொலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு வெங்கடேசன் “நான் இதுபோன்ற காரியங்களை செய்வதில்லை. எனக்குத் தெரிந்த நண்பர் பிரபு என்பவர் மருந்தக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரை தொடர்பு கொண்டு இது குறித்து ஆலோசனை நடத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி அளித்த வாக்குமூலத்தில் “எனது மகன் உயிருக்கு போராடுவதை என்னால் தாங்க முடியாததால் வேறுவழியின்றி பிரபுவை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறினேன். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று முன்தினம் இரவு பிரபு எனது வீட்டிற்கு வந்து உயிருக்கு போராடிய வண்ணத்தமிழ்க்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தார்” என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெரியசாமி,வெங்கடேசன், பிரபு ஆகிய மூவர் மீதும் கொலை மற்றும் கொலை செய்ய உடந்தையாக இருந்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எடப்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி முன் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மாலதி மூவரையும் 15 நாள் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து மூவரையும் காவல் துறையினர் ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.