சேலம்: மது குடிக்க பணம்தர மறுத்த மனைவி... சொந்த வீட்டிற்கு தீவைத்த கணவன்

சேலம்: மது குடிக்க பணம்தர மறுத்த மனைவி... சொந்த வீட்டிற்கு தீவைத்த கணவன்
சேலம்: மது குடிக்க பணம்தர மறுத்த மனைவி... சொந்த வீட்டிற்கு தீவைத்த கணவன்
Published on

ஓமலூர் அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் போதை கணவர் வீட்டிற்கு தீ வைத்தார். தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குமார், பழனியம்மாள் தம்பதியினர் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் குமார் மது பழக்கத்தால் வேலைக்கு செல்லாததால் பழனியம்மாள் செங்கல் சூளை வேலைக்கு சென்று அதில், கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு மூன்று மகன்களையும் படிக்க வைத்து வருகிறார். மேலும், ரேசன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசியை கொண்டே குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், பழனியம்மாளின் கணவர் குமார், தினமும் மது குடிக்கவும், கஞ்சா வாங்கவும் பணம் கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பழனியம்மாள் சம்பாதிக்கும் சொற்ப வருவாயையும் குமார் பிடுங்கி சென்று மது குடித்து வந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று கூறிய நிலையில், இந்த வீட்டில் நீங்கள் எப்படி குடியிருப்பீர்கள் பார்க்கிறேன் என்று கூறி, குடிசை வீட்டிற்கு தீ வைத்தார்.

இதனால், வீட்டில் இருந்த பழனியம்மாளும், மூன்று மகன்களும் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து, தீயை அனைக்க முற்பட்டனர். ஆனால், அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும், வீட்டில் இருந்த ஆடைகள், அரிசி, ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, குழந்தைகளின் பாட புத்தகங்கள், சாமான்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து தீக்கிறையானது. இதனால், பாதிக்கப்பட்ட பழனியம்மாள், மூன்று மகன்களுடன், தொளசம்பட்டி காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சொந்த வீட்டிற்கே தீ வைத்த குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே வீடு மற்றும் உடமைகளை இழந்து மூன்று பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் பழனியம்மாள் தவித்து வருகிறார். அதனால், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வுகள் செய்து, தேவையான உதவிகளை செய்ய வேண்டும் ஏன்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com