சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்லதுரை (37). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். செல்லதுரை மீது கொலை, ரேசன் அரிசி கடத்தல் உட்பட பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இன்று, சுந்தரர் தெருவில் உள்ள முதல் மனைவி ஜான்சி வீட்டில் இருந்து செல்லதுரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியில் எதிரே வந்த கார் செல்லதுரையின் கார்மீது மோதியது. அதேநேரத்தில் மற்றொருகார் பின்புறம் வந்து மோதி நின்றது. அந்த கார்களில் இருந்து இறங்கிய கும்பல் செல்லதுரையை சராமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு பின்புறம் இருந்த காரில் தப்பி சென்றது. இதில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாநகர காவல் துணை ஆணையர் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்லதுரை மற்றும் ஜான்சன் உள்ளிட்ட சிலர் அதேபகுதியை சேர்ந்த ரவுடி நெப்போலியன் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் செல்லதுரை மட்டும், நெப்போலியன் தரப்பினருடன் சமாதானமடைந்தனர். அதனால் ஜான்சன் கோபத்தில் இருந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் செல்லதுரை, கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜான்சன் காட்டிகொடுத்ததால் தான் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று கூறி ஜான்சனை செல்லதுரை தாக்கி உள்ளான். அப்போது கொடுத்த புகாரின் பேரில் செல்லதுரையை போலீசார் கைது செய்து, குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன் பிணையில் வந்த செல்லதுரை, ஜான்சனை கொலைசெய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜான்சன் மற்றும் கூலிப்படையினர் சிலர் சேர்ந்து செல்லதுரையை கொலை செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.