சேலம் மாவட்டம் சாத்தூர் அருகே கர்ப்பிணிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த தாய் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மல்லியகரை பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் அருள். கடலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அருள் சரண்யா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சரண்யா மீண்டும் கருவுற்றார்.
இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த சரண்யா மல்லியகரை அருகே கோபாலபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதால் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக சரண்யாவின் தாய் பூங்கொடி, பக்கத்து வீட்டுக்காரர் அலமேலு என்பவரிடம் விவரம் கேட்டதாக தெரிகிறது.
அதற்கு அலமேலு தனக்கு தெரிந்தவர்கள் மேலும் சிலரை சரண்யாவின் தாய் பூங்கொடிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இறுதியில் ஆத்தூரை சேர்ந்த புகழ் என்பவர் சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து சரண்யாவின் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்தூரை சேர்ந்த பூமணி என்பவர் ரகசியமாக சரண்யாவுக்கு கடந்த 25ஆம் தேதி கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது சரண்யாவின் கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டு தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக சரண்யாவின் கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து பெத்தநாயக்கன் பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார், மல்லியகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட மல்லியகரை போலீசார் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட சரண்யாவின் தாய் பூங்கொடி அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அலமேலு, சின்ராசு, சிவ பிருந்தாதேவி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது கருக்கலைப்பு தடைச் சட்டம் கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சரண்யாவிற்கு ஸ்கேன் செய்த புகழ் மற்றும் போலி மருத்துவர் பூமணி ஆகிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.