செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சந்தன கட்டைகளை கடத்துவதாக சேலம் மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷாஷாங் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு மகுடஞ்சாவடி சாலையில் வாகன தனிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது, ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு சென்ற வேனை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அதில் இருந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் சந்தன கட்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வேனை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த முகமது சுகேல், முகமது பசிலூர் ரஹ்மான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் கேரளாவை சேர்ந்த மேலும் 4 பேர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் தப்பிச் சென்ற சந்தன கட்டை கடத்தல் கும்பல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் கேரளாவை சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைதான 6 பேரையும் சேலம் 6-வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.