திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, காலணி மாலை அணிவித்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இந்தப் பெரியார் சிலையானது சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது. அந்தச் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் பூசி காலணி மாலை அணிவித்தனர். இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறைனர் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த காலணி மாலையை அகற்றி, சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை துடைத்து தூய்மை படுத்தினர்.
இந்தச் சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யக்கோரி அந்த பகுதியினர் முழக்கங்களை எழுப்பினர். பெரியார் சிலை முன்பாக திக, திமுக, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும், சம்பவ இடத்தையும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.