கேரள போலீஸ் ஐயப்ப பக்தரை எட்டி உதைப்பது போன்ற சித்தரித்த புகைப்படத்தை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சபரிமலையில் ஒரு ஐயப்ப பக்தரை கேரள போலீஸ் எட்டி உதைப்பது போன்ற புகைப்படம் ‘போலீஸ் அட்டூழியங்கள்’ என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே அப்புகைப்படம் போலியானது எனத் தெரியவந்தது. இதையடுத்து நேற்று மன்னார் போலீஸ் புகைப்படத்தில் இருப்பவரை கண்டறிந்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மன்னார், செம்பகபள்ளியில் வசித்து வந்த ராஜேஷ் குருப் என்பதும் இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும், கேரளா போலீசாருக்கு எதிராக போராட்டத்தை தூண்டவே இச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆழப்புழா மாவட்ட போலீஸ் சுரேந்திரன் கூறுகையில் ராஜேஷ் குருப் மீது விரோத போக்கை மேம்படுத்துதல் தண்டனைச் சட்டம் 153, அவதூறு சட்டம் 500, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் தண்டனைச் சட்டம் 118, ஒழுங்கு விதிமீறல் சட்டம் 120 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜேஷ் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு, சோதனைக்கு சைபர் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.