வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி ரூ.96 லட்சம் மோசடி செய்த வழக்கில் 7 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்
கள்ளக்குறிச்சியில் டவுனில் நகைக்கடை வைத்திருப்பவர் முருகன். இவருடைய நண்பர் சின்னசேலத்தைச் சேர்ந்த தியாகு என்பவர் அட்சய திருதியை முன்னிட்டு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக முருகனிடம், கூறி வேதாரண்யம் அருகே கருப்பம்புலத்தைச் சேர்ந்த பண்டரிநாதன் என்பவரின் செல் நம்பரை கொடுத்துள்ளார்.
இதையடுத்து முருகன், தியாகு கொடுத்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பண்டரிநாதனிடம் தனக்கு இரண்டு கிலோ தங்கம் தேவைப்படுவதாக கூறியுள்ளார் இதையடுத்து கருப்பம்புலம் வந்த முருகன் தங்கத்துக்குரிய பணம் ரூ 96 லட்சத்தை பண்டரிநாதனிடம் கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பண்டரிநாதன், 850 கிராம் தங்கத்தை முருகனிடம் கொடுத்து விட்டு மீத தங்கத்தை பின்னர் வந்து வாங்கிக் கொளளும்படி கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி முருகன், தான் அழைத்து வந்த நபரிடம் தங்க நகைகளை கொடுத்துவிட்டு தனியாக சென்றுள்ளார்.
இதையறிந்த பண்டரிநாதன் தனது கூட்டாளிகளை அனுப்பி முருகனை மிரட்டி தாக்கிவிட்டு அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்று விட்டனர். இதையடுத்து தான் ஏமாற்றபட்டதை அறிந்த முருகன் வேதாரண்யம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் தனிப்படை அமைப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பண்டரிநாதன் திருச்சியைச் சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ் சென்னையைச் சேர்ந்த பாலகுமார் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன், துர்காதேவி கருப்பம்புலத்தைச் சேர்ந்த செல்லத்துரை வடமலை மணக்காட்டை சேர்ந்த தனுஷ்கொடி ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து நான்கு சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பண்டரிநாதன் உள்ளிட்ட 7 பேரை வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி லிசி 7 பேரையும் 15 சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.