இன்ஸ்டா மூலம் அறிமுகம்... மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த நபர் கைது

இன்ஸ்டா மூலம் அறிமுகம்... மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த நபர் கைது
இன்ஸ்டா மூலம் அறிமுகம்... மூதாட்டியிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்த நபர் கைது
Published on

இங்கிலாந்தில் இருந்து பரிசு அனுப்புவதாகக் கூறி ஊட்டி தேயிலை எஸ்டேட் பெண் உரிமையாளரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்ததாக மும்பையைச் சேர்ந்த விஷால் பாபா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த தனியார் தேயிலை எஸ்டேட் உரிமையாளரான 67 வயது மூதாட்டிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபரின் அறிமுகம் ஏற்பட்டது. அவர், தான் இங்கிலாந்து நாட்டில் இருப்பதாகவும், மனைவி இறந்துவிட்டதால் குழந்தையுடன் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் மின்னஞ்சல் முகவரியில் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது குழந்தை உங்களுக்கு பரிசு அனுப்புவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி குழந்தையிடம் பரிசு பெற விரும்பினார். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரி என பெண் ஒருவர் மூதாட்டியை தொடர்புகொண்டு உங்களுக்கான பரிசுப் பொருளை இந்திய நாட்டில் இறக்குமதி செய்ய வரி செலுத்த வேண்டும் என்றுள்ளார்.

இதையடுத்து குழந்தையின் தந்தை, தனது மகள் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் ரொக்கமும் டாலர்களாக அனுப்பி உள்ளார். அதை விடுவிக்க வரி செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதனை நம்பிய மூதாட்டி தன்னிடம் இருந்த பணம், நகைகளை அடமானம் வைத்து சம்பந்தப்பட்ட நபருக்கு வங்கி மூலம் செலுத்தியுள்ளார்.

இதுபோல் 9 முறை ரூபாய் 73 லட்சம் செலுத்தியுள்ள மூதாட்டி, மீண்டும் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி இதுகுறித்து உதகை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி நபர்களை தேடி வந்தனர்.

இதையடுத்து மோசடி நபர்கள் மும்பையில் இருப்பதாக கிடைத்த தகவல் அடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர் வங்கியில் செலுத்திய பணத்தை பெற்றதாக மும்பை தானே பகுதியைச் சேர்ந்த விஷால் பாபா (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது வங்கிக் கணக்கில் செலுத்திய பணம் ஜார்க்கண்ட், புதுடெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட பல கும்பல்களைச் சேர்ந்த 15 பேருக்கு கை மாறியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு சாலையோரத்தில் வசித்து வரும் பிச்சைக்காரர்கர், ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில் இதுவரை நீலகிரியில் ஆன்லைன் மோசடி சம்பந்தமாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com