சென்னை விமானநிலையம் அருகே துப்பாக்கி முனையில் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவல்லிக்கேணியிலிருந்து விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், போதை தடுப்பு பிரிவு எனக் கூறி காரில் சென்ற 5 பேரைக் கடத்திசென்றதாக தெரிகிறது. பின்னர் காரில் கடத்தி சென்றவர்களிடம் போதை பொருட்கள் வைத்துள்ளீர்களா எனக் கேட்டு, அவர்களிடமிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமான டாலர், யூரோ, சவுதி ரியால் ஆகியவற்றை பறித்துள்ளன.
பின்னர் கடத்தி செல்லப்பட்ட 5 பேரை பல்லாவரம், வண்டலூர், பொத்தேரி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஒவ்வொருவராக இறக்கிவிடப்பட்டனர். கடைசியாக இறக்கி விடப்பட்டவரிடம் செல்போன், பாஸ்போர்ட் போன்றவற்றை கொள்ளையர்கள் திருப்பி கொடுத்துவிட்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரும் ராமநாதபுரத்தை சேர்ந்த துணி வியாபாரிகள் என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குரைஸ், சுக்கூர், பயாத், அக்பர், பிர்தோஷ் ஆகிய 5 பேரும் சென்னையிலிருந்து துணிகளை வாங்கி இலங்கையில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து பரங்கி மலை காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பரங்கி மலை துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.