வேலூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே மானியம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் மீது வேலூர் தெற்கு காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் வேலூர் நகரில் கிளப் வைத்து நடத்தி வருகிறார். இன்று மாலை உதயகுமார் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் போது, அதேபகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவில் தப்பியோடி உள்ளனர். குத்துப்பட்ட உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான உதயகுமாருக்கு 2 திருமணமாகி 6 பிள்ளைகள் இருப்பதாகவும். இந்நிலையில் உறவுக்கார பெண்ணை காதலித்து 3வது திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணிண் அண்ணண் அந்தோர்ஷ், தனது கூட்டாளிகளான இம்மானுவேல், நவின், நிர்மல் ஆகியோருடன் சென்று உதயகுமாரை கொலை செய்ததாக தெரிகிறது. அத்துடன் அவர்கள் தப்பியோடும்போது வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் தங்க சங்கலியை வழிப்பறி செய்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் நபர்களில் 2 பேர் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.