சென்னயில் பலசரக்குக்கடை நடத்தி பொருள்கள் டெலிவரி கொடுக்கச் செல்லும் வீடுகளில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். எப்படி சிக்கினர், எதற்காக கொள்ளையடித்தனர். என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
சென்னை பாரிமுனை, யானைக்கவுனி, சவுகார்பேட்டை, பார்க்டவுன் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில், இதில் ஈடுபட்டது புது கொள்ளையர்கள் என்பதை மட்டும் காவல்துறையினர் அறிந்தனர். இந்தநிலையில்தான், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக ஏழுகிணறு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில் கொள்ளையர்கள் குறித்த அடையாளம் தெரியவந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புந்தாராம், சென்னை பாரிமுனை, ராசப்பா செட்டித் தெருவில் 'ராம்தேவ் புரொவிஷன் ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் மளிகைக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் மேற்கு கோதவரியைச் சேர்ந்த நர்பந்த்லால் சிங் பணிபுரிந்து வந்தார். இருவரும் வீடுகளுக்கு மளிகை பொருள்களை டோர் டெலிவரியும் செய்து வந்தனர். பகலில் வீடுகளை நோட்டமிட்டு இரவில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
இதில் நர்பந்த்லால் சிறிய ஸ்குரூ டிரைவர், கம்பியின் உதவியால் வீட்டின் கதவை திறப்பதில் கைதேர்ந்தவர் என்கின்றனர் காவல்துறையினர். போதைக்கு அடிமையான இருவரும், விலை உயர்ந்த விதவிதமான போதை வஸ்துகளை வாங்கவே வீடுகளில் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்தனர். இருவரும் சேர்ந்து 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்ததாக தெரிவிக்கும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.