நெல்லை மாநகர் காந்தி நகர் அருகே வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 9 சவரன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறிக்க முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் துணிச்சலுடன் போராடியதால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
நெல்லை மாநகர் காந்தி நகரில் உள்ள ஐஓபி தெருவில், செல்வரத்தினம் என்ற பெண் வழக்கம்போல கோலமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், அவரது கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் செயினைப் பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட அந்த பெண் செயினை கைகளால் பிடித்தபடி கூச்சலிட்டுள்ளார். அப்போது அரிவாளைக் காட்டி அந்த பெண்ணை கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். எனினும், துணிச்சலுடன் அவர் போராடியதால், செயினுடன் அந்த பெண்ணை சில அடி தூரம் வரை கொள்ளையர்கள் இழுத்துச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு, பெண்ணைக் காப்பாற்ற வந்த ஒருவரையும் அவர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் செயினைப் பறிக்க முடியாததால் மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார், கொள்ளை முயற்சி குறித்து பெண்ணிடம் விசாரணை நடத்தினார். மேலும், எதிர்வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தார். அதில் கொள்ளை தொடர்பான காட்சிகளும், அதை தடுக்க முற்பட்டவரை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு மூன்று பேர் தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது.
நெல்லை கடையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த முதியவர்களிடம் கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், முதிய தம்பதி இருவரும் கையில் இருந்த பொருட்களால், கொள்ளையர்களை தாக்கி வீரத்துடன் விரட்டியடித்தனர். தற்போது மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் நெல்லையில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.