திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - உடுமலை சாலை ஆத்திக்களம் பிரிவில் வசித்து வரும் காளிதாஸ்(40) என்பவர் தனியாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளனர். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் காளிதாஸ்.
வீட்டுற்குள் சென்று பார்த்தபோது, பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5,000 ரூபாய் பணம், 30ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் முப்பதாயிரம் மதிப்புள்ள எல்.சி.டி டிவியை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, திருட்டு தொடர்பாக புகார் அளித்த நிலையில், கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதேபோன்று, ஆத்திக்களம் அருகே தனியார் கல்வி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் சரவணா நகரை சேர்ந்த சாமிநாதன்(63)என்பவர், வேலைக்காக சென்றுவிட்டார். அவரது மனைவி தனலட்சுமியும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது 20,000 ரூபாய் பணம் மற்றும் 2-சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதனால், பட்டப்பகலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், திருட்டு சம்பவம் நடைபெற்ற இரண்டு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அலங்கியம் போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.