டெல்லியில் இரு கும்பல்களுக்கு இடையேயான ஏற்பட்ட தகராறில் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் ஆரிஃப் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவரை பதறச்செய்துள்ளது. ஆரிஃப் என்பவர் ஒரு ரவுடிக்கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்த ஆரிஃப் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவரை கொலை செய்ய, அவருக்கு எதிரான ஒரு ரவுடி கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.
இதற்காக ஆரிஃபை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல் வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளது. வெளியே வந்தவுடன் நிலைமையை உணர்ந்த ஆரிஃப் அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார். அப்போது ஆரிஃபை அந்தக் கும்பலை சேர்ந்த ஒருவர் பிடித்து முதல் மாடியிலிருந்து தள்ளிவிட, கீழே இருந்த ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 16 குண்டுகள் பாய்ந்த ஆரிஃப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி போலீஸார் ஆரிஃபை கொன்ற 3 பேரை கைது செய்துள்ளனர்.