விழுப்புரம்: பட்டியலின மக்களை அனுமதிக்காத திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் சீல்!

கோலியனூர் அருகே மேல்பாதியிலுள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவுபடி அதிகாரிகள் இன்று கோவிலுக்கு சீல் வைத்தனர்.
தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில், கோலியனூர்
தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில், கோலியனூர் pt desk
Published on

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரௌபதி அம்மன் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் காலம், காலமாக இருந்து வந்துள்ளது.

temple sealed
temple sealedpt desk

நவீனமயமான இந்த காலத்திலும் கூட திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழையக் கூடாது என்பதில் ஊர் பகுதியில் வசித்து வரும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது திரௌபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின மக்களிடையேயும், மற்றொரு சமூக மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரௌபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழையக் கூடாது என்பதில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் உறுதியாக இருந்தனர்.

sealed
sealedpt desk

இதனால் அந்த சமரச பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இதையடுத்து மேல்பாதி கிராமத்தில் இரு சமூக மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் சர்ச்சைக்குள்ளான தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று காலை திரௌபதி அம்மன் கோயிலை வருவாய்த் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது மேல்பாதி கிராமம் முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை சுற்றிலும் பேரிக்கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மேல்பாதி கிராமம் அமைந்துள்ள விக்கிரவாண்டி முதல் கோலியனூர் கூட்ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடியுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ள போலீசார் விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பி அனுப்பி வருகின்றனர்.

temple
templept desk

இதேபோல் கோலியனூர் கூட்ரோடு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. கோவில் வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com