சீர்காழி அருகே திருமணத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்த பெண் ஒருவர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தென்பாதி திருவள்ளுவர் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஆனந்த ஜோதி. இவரது மனைவி சித்ரா (49). இவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டின் முன்பு கோலமிட்டுக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சீர்காழி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை காவலர்கள் ஆராய்ந்தனர். மேலும் சித்ரா வீட்டின் மாடியில் குடியிருந்த பிருந்தா என்பவரையும், அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்துச் சென்ற சையது ரியாசுதீன் என்பவரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது சித்ராவை ரியாசுதீன் திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது.
சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் பிருந்தா கணினி பயிற்சி மேற்கொண்டிருந்த போது, ரியாசுதீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பிருந்தாவுக்கும் அரியலூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே பிருந்தாவின் தந்தை குணசேகரனும் ரியாஸூம் இணைந்து கட்டுமான தொழில் செய்து வந்துள்ளனர்.
திருமணமான ஐந்து மாதத்தில் செல்வகுமார் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற நிலையில், பிருந்தா சித்ராவின் வீட்டு மாடியில் குடியேறியுள்ளார். இதனிடையே பிருந்தாவுக்கும், செல்வகுமாருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், பிருந்தாவை காண ரியாஸ் அடிக்கடி அவரது வீட்டிற்குச் சென்று வந்ததாகத் தெரிகிறது. இதனை பல முறை கண்டித்த சித்ரா ரியாசுதீன் வீட்டிற்கு வருவதற்கும் தடை போட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ரியாசுதீன், பிருந்தாவுடனான உறவிற்கு தடையாக இருந்த சித்ராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக இரண்டு முறை ஒத்திகைப்பார்த்த அவர் கடந்த 18ஆம் தேதி 3:30 மணிக்கு சித்ராவின் வீட்டு அருகே சென்று சரியாக 4:25 மணிக்கு சுத்தியல் போன்ற அமைப்புடைய இரும்பு பைப்பால் அவரை அடித்து கொலை செய்துள்ளார். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ரியாசுதீன் மற்றும் பிருந்தாவை சீர்காழி போலீஸார் கைது செய்தனர். கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி மற்றும் இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.