செய்தியாளர்: ஆனந்தன்
கடந்த ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே ரவுடிகளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் மக்களிடையே பெரும் பேசுபொருளாகியிருந்தது. முதலில் மறைந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாகத்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார் எனப் பேசபட்டது.
இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பெண் தாதா அஞ்சலை, ஆற்காடு சுரேஷின் தம்பி பொண்ணை பாலு உள்ளிட்ட 28 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் பெரிதும் பேசப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் சென்னை போலீசார் தாக்கல் செய்தனர். 4,892 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் திடுக்கிட வைக்கும்படியான பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றியது எவ்வாறு என்பது தொடர்பான முழு விவரத்தையும் சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது.
அதன்படி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு அசுர வளர்ச்சியை அடைந்ததால், அதனை தடுக்கவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றப்பத்திரிகையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நான்கு முக்கிய முன்விரோதங்கள்தான் காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுடன் ஏற்பட்ட நில விவகாரம்
ரவுடி சம்போ செந்தில் உடன் தலைமைச் செயலக காலணியில் வீடு விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிக் கொண்ட விவகாரம்
ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கு
தென்னரசு கொலை வழக்கு
இதில், ஆற்காடு சுரேஷ் மரணத்தின் போது மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாகவும் போலீசார் குற்றபத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன்தான் அனைவரையும் ஒருங்கிணைத்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதும், குறிப்பாக சிறையில் உள்ள நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பொழுதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திட்டம் தீட்டி இருப்பதும் அதேபோல நட்சத்திர விடுதியிலும் கூட்டம் கூட்டி கொலையை செய்ய திட்டமிட்டு இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஆறு மாதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரெக்கி ஆபரேஷன் நடத்தி கொலையை அரங்கேற்றி இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பண உதவியை ரவுடி சம்போ செந்தில் கொடுத்திருப்பதாகவும் மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் போடும் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளாதாக குற்ற பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்ற மொத்தம் பத்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட பதினோரு குற்றவாளிகளிடமும் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தியதாலே கண்ணுக்குத் தெரியாத மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோன்ற தொடர் விசாரணையிலேயே முக்கிய மூன்று குற்றவாளிகளான நாகேந்திரன் சம்போ செந்தில் மற்றும் அஸ்வத்தாமன் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்களின் 63 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களது வங்கி கணக்கில் இருந்த ஒன்றரை கோடி பணம் மற்றும் ரொக்கமாக 80 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றபத்திரிகையில் 300க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் குற்றப் பத்திரிகைக்குள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவரது கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை பிடிக்க விரைவில் வெளிநாட்டிற்கு சென்னை போலீசார் செல்ல இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.