வெளிநாட்டிற்கு ஆள் கடத்தல் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் பாடகர் தலேர் மெகந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரபல 'பாப்' பாடகர் தலேர் மெகந்தி. இவர் மீது வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும்போது, இசைக்குழுவினர் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தலேர் மெகந்தி மற்றும் அவரது சகோதரர் ஷாம்ஷெர் சிங் மீது சட்டவிரோதமாக ஆட்களை கடத்திச் சென்றதாக பாட்டியாலா போலீசார் கடந்த 2003இல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா நீதிமன்றம் தலேர் மெகந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து தலேர் மெகந்தி, பாட்டியாலா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்த நிலையில், தலேர் மெகந்தியின் மேல்முறையீடு மனுவை நிராகரித்த நீதிபதிகள் இரண்டாண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தனர். இதையடுத்து தலேர் மெகந்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தலேர் மெகந்திக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது பஞ்சாபில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ,
இதையும் படிக்கலாம்: ’யார் பார்த்த வேலை இது’ வீட்டின் பின்புறம் திடீர் கஞ்சா தோட்டம்..ஷாக் ஆன முன்னாள் எம்எல்ஏ!