சென்னையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நான்கு பேரை சிசிடிவியின் உதவியால் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, தரமணி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தனது இருசக்கர வாகனத்தை (பல்சர்) கடந்த 15ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசன், தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பின்னர் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தை இருவர் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. மற்றொரு சிசிடிவி காட்சியில் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மூலம், தமிழரசனின் இருசக்கர வாகனத்தை மிதித்து தள்ளிக்கொண்டு திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது வேளச்சேரியை சேர்ந்த ஜீவா என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அவரது நண்பர் விமல்ராஜ் உதவியுடன் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அத்துடன் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சூர்யா மற்றும் பவுல்ராஜ் ஆகியோர் என்பது விசாரணையில் அறியப்பட்டது. அதனடிப்படையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆதம்பாக்கத்தை சேர்ந்த விமல்ராஜ் (20), பவுல்ராஜ் (20), தரமணியை சேர்ந்த சூர்யா (20) மற்றும் வேளச்சேரியை சேர்ந்த ஜீவா(21) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.