புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ராஜ்குமார் என்பவர் கடந்த ஆண்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஏற்கெனவே இரண்டு திருமணம் செய்திருந்த ராஜ்குமார், பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்துவிடுவேன் எனக்கூறி கட்டாய கருத்தரிப்பு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ராஜ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காகவும், குளிர்பானத்தில் மயக்கமருந்து கலக்கிக்கொடுத்த குற்றத்திற்காகவும் மேலும் 12 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 17 வயது சிறுமி கர்ப்பம் தரித்து தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஏற்கெனவே அரசு 4 லட்சம் இழப்பீடு வழங்கிய நிலையில், மேலும் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தவிட்டுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.