புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் விற்பனை செய்ததாக 7 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து போதை மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகர் பகுதிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரைகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களையும் அதனை பயன்படுத்துவோர்களையும் கண்டறிந்து கைது செய்ய எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டதன் பேரில் இதற்கென தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை சாந்தபுரத்தை சேர்ந்த சூரியநாராயணர் என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் உட்பட மேலும் சிலர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து புதுக்கோட்டை நகர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக புதுக்கோட்டையைச் சேர்ந்த சூரியநாராயணன், விக்னேஷ், பாண்டி, பாஸ்கர், அனுமந்தன், அற்புதன், சரண் ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 154 போதை மாத்திரைகள், மற்றும் ஊசிகள் நான்கு இருசக்கர வாகனங்கள் ஐந்து செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை நகர் பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளின் விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் ஏற்கெனவே பத்திற்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது மேலும் 7 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.