சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் பள்ளி காப்பகத்தில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை சமூக நல பாதுகாப்புத்துறை சார்பில் நடத்தப்படும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்கு பல்வேறு துறைசார்ந்த இருபாலின ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறனர். குறிப்பாக இப்பள்ளியில் அதிக மாணவர்கள் விடுதியில்தான் தங்கியுள்ளனர். இந்தப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(46) உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்து மாணவர்களுக்கு உடற்கல்வி மற்றும் விளையாட்டு தொடர்பான வகுப்புகளை எடுத்துவருகிறார். இவர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக இந்த பள்ளியில் உள்ள 9 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையுள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சில மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்னை குறித்து மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில், பள்ளி காப்பாளர் விஜயகுமாரிடம் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து புகார் அளித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருதி காப்பாளர் விஜயகுமார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனையடுத்து அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். காப்பகத்தில் உள்ள மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடைமுறைகளை அமைத்துத்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.