கணவனைக் கொலை செய்த மனைவி மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து, இறந்தவரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கும் குட்டூரை சேர்ந்த கீதாவுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், முனியப்பனுக்கும், கீதாவுக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஐந்தாண்டுகளாக, கீதா கணவனைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் கீதா சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே நேற்று முனியப்பன் வீட்டில் ரத்தக் காயத்துடன் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து முனியப்பனின் தாய் முருகம்மாள் கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தொடர்ந்து என் மகனை அவரது மனைவி கீதா தான் கொலை செய்திருப்பார் எனக் கூறி, கீதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் காவல் துறையினர், முனியப்பன் மனைவி கீதா மீது நடவடிக்கையோ, உரிய விசாரணை செய்யவில்லை எனக்கூறி, ஆத்திரமடைந்த முனியப்பனின் உறவினர்கள் மாலை கிருஷ்ணாபுரம் காவல்நிலையம் முன்பு கீதா மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் கீதாவை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.