சொத்துப் பிரச்னை காரணமாக சகோதரரையும், அவரது மனைவியையும் கொலை செய்த பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், வசந்தாமணி தம்பதியின் மகன் பாஸ்கரனுக்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. பத்திரிகையை எடுத்துக்கொண்டு உற்றார் உறவினருக்கு கொடுத்து வந்த செல்வராஜ், வசந்தாமணி தம்பதிதான் இன்று உயிரோடு இல்லை.
சகோதரி கண்ணம்மாவுக்கு பத்திரிகை வைக்க தனது மனைவியுடன் சென்ற செல்வராஜ், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்கள் சென்ற காரோ, கரூர் அருகே தான்தோன்றிமலை பக்கம் கேட்பாரற்று கிடந்தது. காரில் இருந்த மிளகாய்பொடி, அவர்கள் இருவரும் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை கிளப்பிய நிலையில், அவர்கள் கடைசியாக சென்ற கண்ணம்மாளின் வீட்டில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கண்ணம்மாவின் வீட்டின் அருகே புதிதாக தோண்டப்பட்டு மூடப்பட்ட மண் சந்தேகத்தை கிளப்பிய நிலையில், கண்ணம்மாவோ, கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகத்தின்பேரில் அவரை காவலில் எடுத்து விசாரித்தபோதுதான் அந்த கொடூரம் தெரியவந்தது. சகோதரர் செல்வராஜையும், அவரது மனைவியையும் கொலை செய்ததை கண்ணம்மாள் ஒப்புக்கொண்டார்.
ஒரு பெண் தனியாக இருவரை கொலை செய்திருக்க முடியாது என்று விசாரணையை தீவிரப்படுத்தியபோது, கண்ணம்மாவின் மருமகன் நாகேந்திரன் பிடிபட்டார். அவருக்கு உதவிய அவரது நண்பர் இளங்கோவும் விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார். இரட்டைக் கொலையின் பின்னால் சொத்துப்பிரச்னை இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. உடன்பிறந்தவர்களான செல்வராஜ், கண்ணம்மாவுக்கு கரூர் அருகே பூர்வீக இடம் இருந்துள்ளது. அந்த சொத்தை விற்றபோது 44 லட்சம் ரூபாய் கிடைத்த நிலையில், சகோதரி கண்ணம்மாவுக்கு செல்வராஜ் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். அதன் பிறகு இருவரின் உறவில் விரிசல் அதிகரித்த நிலையில், கண்ணம்மாளின் மகள் பூங்கொடி காதல் திருமணம் செய்ததால் செல்வராஜ் குடும்பத்தினர், இவர்களுடன் பெரிதாக உறவு பாராட்டவில்லை என்பது கண்ணம்மா குடும்பத்தாருக்கும், செல்வராஜ் குடும்பத்தாருக்குமான விரிசலை அதிகரித்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மகனின் திருமண பத்திரிகையுடன் சென்ற சகோதரனுடன் ஏற்பட்ட சண்டை, கொலையில் முடிந்ததாக கூறுகிறார்கள் காவல்துறையினர். கண்ணம்மா காட்டிய இடத்தில் தோண்டியபோது செல்வராஜ் மற்றும் வசந்தாமணியின் உடல்கள் கிடைத்தன. வசந்தாமணியின் கழுத்து அறுபட்ட நிலையிலும், செல்வராஜின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. இருவரின் உடல்களும் அங்கேயே உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.