ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் குறைப் பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர்கள் ராம்குமார் - கல்பனா தம்பதி. இவர்களுக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக கல்பனா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். சுமார் 20 வாரங்கள் சிசு வளர்ந்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பனிக்குடம் உடைந்ததாக தெரிகிறது. எனவே அதிகாலையில் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கல்பனாவை சோதனை செய்த மருத்துவர்கள் பனிக்குடம் உடையவில்லை எனவும், நீர் சத்து தேவையான அளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வலி குறையாததால், கல்பனா உள் நோயாளியாக 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி கடந்த வியாழக்கிழமை தனியார் ஸ்கேன் நிலையத்தில் சிசுவின் நிலை குறித்து பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை சுமார் 600 கிராம் இருப்பதாகவும், நீர் சத்து குறைந்திருப்பதாகவும் அறிக்கை வந்துள்ளது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை குழந்தையை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். ஆனால் பிறந்த சில மணிநேரங்களிலேயே குழந்தை உயிரிழந்தது.
இதையடுத்து, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை பிழைக்க வைக்க மருத்துவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதன் பெற்றோர் குற்றம்சாட்டினர். மேலும், டிஸ்சார்ஜ் அறிக்கையில் குழந்தையின் எடையை 600 கிராம் என்பதற்கு பதிலாக வெறும் 200 கிராம் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, மருத்துவமனை செவிலியர் லஞ்சம் கேட்டதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேஷ் குமாரிடம் கேட்ட போது, "20 வாரங்கள் மட்டுமே வளர்ந்த சிசுவின் எந்த பாகமும் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. அதை பிழைக்க வைக்கவும் முடியாது. கல்பனாவுக்கு கடந்த 6 தினங்களாக முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் லஞ்சம் வாங்கிய செவிலியர் குறித்து எழுத்து பூர்வமாக என்னிடம் புகார் அளித்தால் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.