பொள்ளாச்சியில் 40 ஆண்டுகால பழமையான புலித்தோலை விற்க முயன்ற 6 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வன சரகத்திற்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் - அழுக்கு சாமியார் கோயில் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில், புலித்தோல் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனக் கோட்ட துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு காரில் இருந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் புலித்தோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த ஆனைமலையை சேர்ந்த பிரவீன், சேத்துமடையை சேர்ந்த உதயகுமார் மற்றும் ரமேஷ் குமார், ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சபரி, சங்கர் ஆகிய 5 பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட உதயகுமாரின் தந்தை மயில்சாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டைக்காரன் புதூர் மாரியம்மன் கோயில் எதிரில் உள்ள ஜானகிராமன் என்பவரது வீட்டில் பணியாற்றி வந்ததும், அவர் வீட்டில் வைத்திருந்த பழமையான புலித்தோல் ஒன்றை, திருடி தனது வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. மேலும் தற்போது அந்த புலித்தோலை விற்க முடிவுசெய்து, தனது மகனின் நண்பர்களை அணுகி, புலித்தோலை சுமார் மூன்று கோடிக்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த மயில்சாமி உள்ளிட்ட 6 பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர். மேலும் புலித்தோலை பறிமுதல் செய்த வனத்துறையினர், பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக புலித்தோல் உள்ளிட்ட வன உயிரின பொருட்களை வைத்திருக்கும் நபர்கள், ஒருவார காலத்திற்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக வன உயிரின பொருட்கள் வைத்து இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படுவார்கள் என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.