ஆன்லைன் மோசடி நாள்தோறும் புதிய வடிவில் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆன்லைன் மோசடி தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், நூதன பண மோசடி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது கூகுள் பேவுக்கு பணம் அனுப்புவார். பின்னர் பணத்தை உங்கள் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பிவிட்டதாக தெரிவிக்க உங்களை அழைப்பார். தொடர்ந்து, தான் அனுப்பிய பணத்தை தனது எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு அவர் கேட்பார். அவர் கூறியபடி பணத்தை அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்.
எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் அனுப்பி இருந்தால், அதனை அவருக்கு திருப்பி அனுப்பாமல், அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு அந்தத் தொகையை கொண்டு சென்று புகார் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த புதிய வகை மோசடி தற்போதுதான் தொடங்கி உள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.