ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் முடிவு!

ரூ.2,438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி வழக்கில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கைதுசெய்யப்பட்ட ஹரீஸிடம் விசாரணை செய்தபோது தகவல் கிடைத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆர்.கே.சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ்movie screenshot
Published on

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால் அறிவித்தபடி பணத்தைத் திரும்ப செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஹரீஷ்,
ஹரீஷ், ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குநர்

இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநர்களான ஹரீஷ் மற்றும் மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். பின்னர், ஹரீஷை காவலில் எடுத்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு சுமார் 12 கோடி ரூபாய், ஹரீஷிடம் இருந்து கைமாறி இருப்பது தெரியவந்துள்ளது. வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த பணப் பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆருத்ரா
ஆருத்ரா நிறுவனம்

ஆனால் ஆர்.கே. சுரேஷ் இந்த தகவல் தெரிந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், அவரை வரவழைத்து விசாரணை செய்ய திட்டமிருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 21 பேர் மீது வழக்கு பதிவுசெய்து, நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில்குமார், நாகராஜ், மேலாளர்கள் பேச்சிமுத்து ராஜா, ஐயப்பன், ஏஜென்ட் ரூசோ சந்திரசேகர் ஆகிய எட்டு பேரை கைதுசெய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com