முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணத்தில் காவல் நிலைய விசாரணை சிசிடிவி காட்சிகள் வெளியீடு

முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணத்தில் காவல் நிலைய விசாரணை சிசிடிவி காட்சிகள் வெளியீடு
முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மரணத்தில் காவல் நிலைய விசாரணை சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Published on

முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டனை காவல்துறையினர் நிறுத்தியதாகவும், அப்போது மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்து காவல் நிலையத்தில் விசாரணைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன், போலீசார் விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனை, காவல்நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தான் அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். போலீசார் தரப்பில் இருந்து, ‘மணிகண்டன் பாம்பு கடித்து இறந்திருக்கிறார்’ என விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம், போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இருப்பினும் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை மற்றும் முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இவற்றைத் தொடர்ந்து சந்தேக மரணம் 174 வழக்கு பதிவு செய்யப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவன் மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உடலை வாங்காமல் கிராமத்திற்கு நேற்று திரும்பி சென்று விட்டனர்.

இதையடுத்து அவரது உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் அடித்து உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் நடந்த சிசிடிவி காட்சிகளை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவன் மணிகண்டனை போலீசார் யாரும் தாக்கியதாக காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com