மதுரை பெண்ணிடம் தங்கச் செயினை பறித்து சென்ற ஊர் காவல்படை காவலரை, சினிமா பாணியில் துரத்திப் பிடித்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
மதுரை செல்லூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. இவர் அப்பகுதியில் மகளிர் குழு தலைவியாக இருந்து வருகிறார். மகளிர் குழுக்களிடம் பணம் வசூல் செய்து மதுரை நரிமேடு பகுதியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தார். அவர் அய்யனார் தெருப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்திலிருந்த தங்க செயினை பறித்து சென்றனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அப்போது அதே பகுதியில் ஏதேச்சையாக தனது இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை அண்ணாநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழகுமுத்து, இதை பார்த்ததும் வழிப்பறி திருடர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றார். அவர் சினிமா பாணியில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று திருடர்களை மடக்கி பிடித்தார். அத்தோடு அவர்கள் பறித்துச் சென்ற இரண்டரை சவரன் தங்க செயினையும் கைப்பற்றினார்.
மேலும் இரண்டு வாலிபர்களை பிடித்ததுடன், இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் , செயினை பறித்து சென்றது நரிமேடு பகுதியை சேர்ந்த ஊர் காவல் படையில் காவலராக பணியாற்றும் அஜய் என்பதும் , மற்றொருவர் அவரது 17 வயது நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களை இருவரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறைக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய ஊர்காவல் படை காவலர் , ஆடம்பரமாக வாழ எண்ணி செயின் பறிப்பு குற்றத்தில் ஈடுபட்டதால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருடனை விரட்டிப்பிடித்த காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்தா முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.