கேளம்பாக்கத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர். புகைப்படம் இல்லாமலேயே குழந்தையை கண்டுபிடித்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார். இவருக்கு ஒரு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இவர் கூலி தொழிலாளராக இருந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஹேமந்த் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை இவரது ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள ரயில் நிலையங்களுக்கு குழந்தை குறித்த அடையாளங்களை தெரிவித்து தேடிவந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட ஆண் குழந்தை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் தேடினர்.
மேலும், பிளாட்பாரம் 9- ல் புறப்படத் தயாராக இருந்த மைசூர் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தேடினர். அப்போது டி 4 பெட்டியில் குழந்தையுடன் கணவன்- மனைவி ஒருவர் இருந்தனர். சந்தேகமடைந்து விசாரித்தபோது அவர்களிடம் இருந்தது கடத்தப்பட்ட ஆண் குழந்தை என்பது தெரிந்தது.
குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், பெங்களூரைச் சேர்ந்த மஞ்சு மற்றும் அவரது மனைவி கோமலா ஆகியோரை கேளம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட மூன்றரை மணி நேரத்தில் புகைப்படமே இல்லாமல் குழந்தையை சாதுர்யமாக மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.