கும்பகோணம் பகுதிகளில் ஹெலிகாப்டர் சகோதரர்களின் பல கோடி ரூபாய் மோசடி, ஐஸ்வர்யம் நிதி நிறுவன மோசடி போன்றவற்றை தொடர்ந்து தற்போது கிரிப்டோகரன்சியில் முதலீடு என சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல். அவர்கள் மீது தஞ்சை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுத் தரக் கோரி அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கும்பகோணம் முல்லை நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் மேம்பாலம் அருகில் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ஒன்றுக்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.15,000 வீதம் 24 மாதங்கள் வரை தொகை வழங்குவதாக கூறி பலரிடம் முதலீட்டை பெற்றுள்ளார் இவர். சொன்னபடி முதல் நான்கு, ஐந்து மாதங்கள் வரை பணம் வழங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த அமானுல்லா என்பவர் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். மேலும் கமிஷன் அடிப்படையில் இவர், சுமார் 921 பேரிடம் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சுமார் 10 கோடி ரூபாயை மூதலீடு செய்துள்ளார். இவரைபோல இந்த நிறுவனத்திடம் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மோசடி நடந்துள்ளது. இதையடுத்து கும்பகோணத்தில் இருந்த அலுவலகத்திற்குச் சென்று, பங்குத் தொகையை கேட்டு முதலீடு செய்தவர்கள் நெருக்கடி கொடுத்த போது, உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக பாதிக்கப்பட்ட அமானுல்லா தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.