சென்னை அபிராமபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். இவரது வீட்டில் லாக்கரில் இருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் வீட்டில் பணி செய்த 11 ஊழியர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தியது. அதன் முடிவில் அவர்கள் யாரும் நகைகளை திருடவில்லை என காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் புகார் குறித்து பாடகர் விஜய் யேசுதாஸை (தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்) பலமுறை காவல்துறை தொடர்பு கொண்டு கேட்ட போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும், புகார் அளித்த விஜய் யேசுதாஸின் மனைவி தக்ஷனாவும் காவல் நிலையத்தில் காவலரிடம் விசாரணைக்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.
திருடுபோனதாக சொல்லப்பட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மிக பாதுகாப்பான நம்பர் பதிவிடும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததும் அவை உடைக்கப்படவில்லை என்பதும் மேலும் அந்த லாக்கரின் கடவுச்சொல் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவி தக்ஷனா ஆகிய இருவருக்கு மட்டுமே தெரிந்துள்ளது எனவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகைகள் காணாமல் போனதாக தக்ஷனா கூறியது பிப்ரவரி மாதம் 18ம் தேதி. காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மார்ச் மாதம் 30 ஆம் தேதி. 40 நாட்களாக புகார் அளிக்காமல், 40 நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன என காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து காவல்துறை விளக்கம் கேட்டபோது, விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் சரியான முறையில் பதில் இல்லை என காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.
ஒருவேளை நகைகள் திருடு போனதாக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதனையடுத்து குடும்பத்தாரிடம், குறிப்பாக விஜய் யேசுதாஸ் மனைவியிடம் தீவிர விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.