முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் நண்பரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் நண்பரிடம், காவல்துறையினர் ரகசிய விசாரணை நடத்தினர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கனகராஜின் சகோதரர் தனபால், மனைவி, மைத்துனர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அவரின் நண்பர் குழந்தைவேலுவிடம் மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையிலான குழு விசாரணை நடத்தியுள்ளது. இவர்களிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பல முக்கிய நபர்கள் காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப் படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.