ஆரணி அருகே குடிபோதையில் காரை வேகமாக ஓட்டி, சாலையோரம் சென்ற பெண் மீது மோதிய இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் தாக்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த விளை கிராமத்தை சேர்ந்த பெண்மணி ராதா (42). இவர் ஆரணி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியிலிருந்து - ஆரணி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த சொகுசுகார் ஒன்று ராதா மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த ராதாவை மீட்ட பொதுமக்கள், ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அத்துடன் காரை சிறைபிடித்து, அதை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததால் கோபமடைந்த மக்கள் தர்மஅடி கொடுத்தனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நில அபகரிப்புபிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரியும் சேதுபதி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆய்வாளர் சேதுபதியை மீட்டனர். மேலும், அவரை ஆரணி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.