'ரூ1 லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் ஆறரை லட்சம்'- தாளாத வட்டிக் கொடுமை.. நிற்கதியில் தம்பதி

'ரூ1 லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் ஆறரை லட்சம்'- தாளாத வட்டிக் கொடுமை.. நிற்கதியில் தம்பதி
'ரூ1 லட்சம் கடனுக்கு வட்டி மட்டும் ஆறரை லட்சம்'- தாளாத வட்டிக் கொடுமை.. நிற்கதியில் தம்பதி
Published on

புதுக்கோட்டையில் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய சம்பவத்தில்  6 பேர் மீது கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் அனிதா தனது கடையை விரிவுபடுத்துவதற்காக சின்னப்பா நகர் இரண்டாம் வீதியைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்மணியிடம் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார். அதற்காக அனிதா இந்திராணியிடம் இடத்து பத்திரம், வங்கி காசோலை, 100 ரூபாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து உள்ளிட்டவற்றை பிணையாக கொடுத்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு 8,000 வட்டி என எடுத்துக்கொண்டு 92 ஆயிரம் ரூபாயை அனிதாவிடம் இந்திராணி கொடுத்துள்ளார். ஆனால் அடுத்த ஒரு வாரத்திலேயே கொடுத்த பணத்தை உடனடியாக கட்டுமாறு இந்திராணி நெருக்கடி கொடுத்ததன் அடிப்படையில் மாத வட்டி, தின வட்டி என்ற அடிப்படையில் 12.1.22 ஒன்றுக்குள் 97 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வட்டியாக மட்டுமே அனிதா கொடுத்துள்ளார். அசல் அப்படியே இருந்துள்ளது. இப்படியே தொடர்ந்து அனிதாவை மிரட்டி கடந்த மாதம் வரை 6 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை வட்டியாக மற்றும் இந்திராணி மற்றும் அவரது மகன் மகன்கள் அதேபோல் சக வட்டிக்கு விடும் நபர்கள் மூலம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வட்டி கட்ட முடியாத அனிதா கடந்த 15ஆம் தேதி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதன் பின்னர் அவரது கணவர் ராஜா உள்ளிட்டோர் இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கணேஷ் நகர் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இந்திரா அவரது மகன் மணிகண்டன் மகள் பூப்பாண்டி மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த ராதா காமராஜபுரத்தை சேர்ந்த ஹரி அவரது மனைவி சித்ரா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதில் முதல் குற்றவாளியான இந்திரா மற்றொரு கந்து வட்டி வழக்கில் கணேஷ் நகர் போலீசாரால் கடந்த 20ஆம் தேதி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கந்து வட்டி கொடுமை குறித்து அனிதா மற்றும் அவரது கணவர் ராஜா கூறுகையில், மளிகைக் கடை தொழிலை விரிவுபடுத்துவதற்காகத்தான் இந்திராவிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கினோம். ஆனால் கடந்த மாதம் வரையில் 6 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை வட்டியாக மட்டும் கொடுத்துள்ளோம். அதற்கான ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது. எங்களின் இயலாமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திரா மற்றும் அவருடன் வட்டி தொழில் செய்யும் நபர்கள் எங்களை மிரட்டி அசிங்கமான வார்த்தைகளால் பேசி தின வட்டி, மீட்டர் வட்டி என  வட்டிக்கு மேல் வட்டி போட்டு எங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டே இருந்ததனர். சொத்து பத்திரத்தையும், வங்கி காசோலையும் கொடுத்துவிட்டதால் அச்சத்தில் நாங்களும் பல்வேறு பகுதிகளில் கடன் வாங்கி வட்டி கட்டிய நிலையில் ஒரு கட்டத்தில் இனி இவர்களின் மிரட்டலில் இருந்து வாழ முடியாது என்ற எண்ணத்தில் தான் அனிதா தற்கொலைக்கு முயன்றார்.

பிள்ளைகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுக்க கூட வழியில்லாத நிலையில் தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையிலும் கூட இந்திரா உள்ளிட்டவர்களின் மிரட்டல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அதன் பின்புதான் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இனியாவது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என அனிதாவும் அவரது கணவர் ராஜாவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com