உத்தரபிரதேசம் மாநிலத்தில் 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பாபுஹரா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் கடந்த புதன்கிழமையன்று வயல்வெளியில் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். அவர்களை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், 2 சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கான்பூர் மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. மேலும், சிறுமிகளின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்பதும் மூவரும் விஷம் குடித்திருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
சிறுமிகளுக்கு விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக ஒரு சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஐஜி லஷ்மி சிங் கூறுகையில், “இதுதொடர்பாக முக்கிய குற்றவாளி வினய் மற்றும் மற்றும் அவருக்கு உதவிய ஒரு சிறுவன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் சிறுமிகள் வயல்வெளிக்கு வரும்போது வினய் என்பவர் அவர்களுடன் பேசி பழகி வந்துள்ளார். அதில் ஒரு பெண் மீது வினய் ஒருதலைபட்சமாக காதலை வளர்த்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்துவிட்டார். மேலும், அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணையும் அடிக்கடி கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதை அந்த பெண் கொடுக்க மறுத்துள்ளார். எனவே வினய் அந்த சிறுமியை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.
வழக்கம்போல் 3 சிறுமிகளும் வயல்வெளிக்கு வந்துள்ளனர். அப்போது வினய் காதலித்த சிறுமிக்கு தாகம் எடுக்கவே தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது வினய், நீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து அந்த சிறுமிக்கு கொடுத்துள்ளார். அந்த சிறுமி குடித்துக்கொண்டிருக்கும்போதே மற்ற 2 சிறுமிகளும் தண்ணீரை பிடுங்கி குடித்துள்ளனர். மற்ற இரண்டு சிறுமிகளையும் தண்ணீர் குடிப்பதைத் தடுக்க முயன்றதாகவும் ஆனால் பலனளிக்கவில்லை எனவும் வினய் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சிறுமிகள் மயக்கம் அடைந்தபோது, அவர் பீதியடைந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வினய்யின் வாக்குமூலம் சரிபார்க்கப்பட்டு வருகிறது” என்றார்.