சென்னை: உண்டியல் திருட்டை தடுத்த காவலாளிக்கு நேர்ந்த பரிதாபம் - சிறார்களின் கொடூர செயல்

சென்னை: உண்டியல் திருட்டை தடுத்த காவலாளிக்கு நேர்ந்த பரிதாபம் - சிறார்களின் கொடூர செயல்
சென்னை: உண்டியல் திருட்டை தடுத்த காவலாளிக்கு நேர்ந்த பரிதாபம் - சிறார்களின் கொடூர செயல்
Published on

சென்னையில் கோயில் உண்டியல் திருட்டை தடுத்த காவலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 3வது தெருவில் வசித்து வருபவர் பாபு(41). இவர் ஐஸ்ஹவுஸ் நடேசன் ரோடு அருகில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் காவலாளியாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். கடந்த 17 ஆம் தேதி அதிகாலை பாபு கோவிலில் இருந்தபோது முகமூடி அணிந்த 4 பேர் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்தனர்.

உடனே பாபு அவர்களை தடுத்து கூச்சலிட்டுள்ளார். அப்போது பாபுவை அந்த 4 பேரும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து பாபு அளித்த புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

படுகாயமடைந்த பாபுவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் காளீஸ்வரி தலைமையிலான போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் காவலாளி பாபுவை தாக்கியவர்கள் 15 வயது, 17 வயது, 17 வயது, மற்றும் 14 வயதுடைய 4 சிறார்கள் என கண்டறியப்பட்டு அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து 4 இளஞ்சிறார்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் 2 அடி நீளமுள்ள இரும்புகம்பி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், நான்கு இளஞ்சிறார்களும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி பாபு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொள்ளை முயற்சி வழக்காக இருந்த இவ்வழக்கை கொலை மற்றும் கொள்ளை வழக்காக மாற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் உடற்கூறு ஆய்விற்கு பின் உடலைப் பெறவந்த காவலாளி பாபுவின் மனைவி ஸ்ரீதேவி “நான் எனது 16 வயது மகளுடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறேன். கணவர் பாபுவின் வருமானம்தான் இதுவரை எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தது. தற்போது அவர் இல்லாத நிலையில் எனது மகளின் படிப்பை தொடரவும், தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காக்கவும் அரசு இயன்ற உதவி செய்யவேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com