மதுரையில் பழிக்கு பழி வாங்கப்படும் என போஸ்டர் ஒட்டிய சிறார்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜசேகர். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் ஒருவரான முருகன் என்பவர் நரம்பு தளர்ச்சி காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
ராஜசேகர் உயிரிழந்து ஓராண்டு ஆன நிலையில் அவருக்கு சிலர் நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ராஜசேகரை கொலை செய்த மீதமுள்ள 7 பேரை கொலை செய்யும் நோக்கோடு, பழிக்கு பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு "அடக்க முடியாத கோபத்தை கட்டி வை,காலம் உன்னிடம் வரும், வெற்றி வீரமும் உன்னிடமே.. பட்டா பயலுக" என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டுயுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சிறார்கள் எட்டு பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.