14 வயது சிறுமியைக் கொடுமை செய்த பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காமராஐர் நகரை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளி ஒருவர் தனது 14 வயதுடைய மகளை மணல் அள்ளும்போது ஆற்றங்கரைக்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு மணல் அள்ள ஆற்றங்கரைக்கு அழைத்து செல்லும்போது அங்கு 16 வயதுடைய குடிதாங்கியை சேர்ந்த வசந்த் என்பவர் சிறுமியிடம் பழகுவது போல் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வசந்த் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து பாலியல்தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். இதனிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார். மேலும் அந்தச் சிறுமியின் ஆடைகளை கலைந்து அடித்து உதைத்து அவமானப்படுத்தியதாகவும் கூறுப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் கோபாலகிருஷ்ணனை சந்தித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் சிறுமியின் தாய் அவரது கணவருடன் கோபித்துகொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனைதொடர்ந்து அந்தச் சிறுமி அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பரிடம், தனது தாயிடம் பேச செல்போன் கேட்கவே அவர் அதற்கு மறுத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வித்யா, சிவக்குமார் ஆகியோர் அந்தச் சிறுமியின் வீட்டிற்குச் சென்று, சிறுமி செல்போனை திருடிவிட்டதாக கூறியதோடு சிறுமியை அங்குள்ள ஒரு மரத்தில் நிர்வாணமாக்கி கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.
மேலும் சிறுமியின் உடலில் சூடு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின் சிறுமி மயங்கி விழந்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் மயக்கம் தெளிந்த பின் அந்தச் சிறுமி கயிற்றை அவிழ்த்துகொண்டு, வாழைத்தோட்டத்திற்கு சென்று மறைந்துள்ளார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் இதனை அறிந்து சிறுமியின் தந்தைக்கு போன் செய்துள்ளார். பின் அந்தச் சிறுமியை காப்பாற்றி திருவையாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், வித்யா, சிவக்குமார், மகேந்திரன், வசந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.