சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: 2 மணிநேரத்தில் கண்டுபிடித்த போலீசார் - நடந்தது என்ன?

சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: 2 மணிநேரத்தில் கண்டுபிடித்த போலீசார் - நடந்தது என்ன?
சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்:  2 மணிநேரத்தில் கண்டுபிடித்த போலீசார் - நடந்தது என்ன?
Published on

கோயம்பேட்டில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய கும்பல் சிக்கியது எப்படி? அலறல் சத்தத்தை வைத்து வெளிக்கதவை பூட்டி 2 மணி நேரத்தில் மீட்ட உதவி ஆய்வாளர். நடந்தது என்ன? தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை புளியந்தோப்பு டிமலஸ்சாலை கே.பி பார்க் பகுதியில் வசிப்பவர் சாலமன். அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் நிறுவன தலைவரான சாலமன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு சாலமன் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் இருவரும் கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்தி விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று சாலமனை அடித்து உதைத்து காரில் கடத்திச் சென்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உடனே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கடத்தப்பட்ட சாலமனின் செல்போன் எண்ணை வைத்து அவரது டவர் லோக்‌கேஷனை ஆய்வு செய்தனர். அதில் மதுரவாயல் அபிராமி நகரை காண்பித்தது. உடனே போலீசார் அங்கு சென்று படுகாயத்துடன் கிடந்த சாலமனை மீட்டு கடத்தல்காரர்களை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும்அண்ணாநகரைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலமனுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் ரியல் எஸ்டேட் வியாபாரம் சம்மந்தமாக அவரிடம் 55 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சாலமன் தலைமறைவானதால் அவரை நீண்ட நாட்களாக தேடிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோயம்பேட்டில் உள்ள ஹோட்டலில் கண்ணன் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றபோது அங்கு எதிர்பாராத விதமாக சாலமனை பார்த்துள்ளார். உடனே தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலமனை பிடித்து பின்னர் காரில் கடத்திச்சென்று கண்ணன் நடத்தி வந்த குடோனில் வைத்து கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு ஆயுதங்களால் தாக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்ணன் மற்றும் அவரது நண்பர்களான விழுப்புரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் சுரேஷ், மதுரவாயலை சேர்ந்த சரவணன், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த நாராயண மூர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சாலமனை 5 பேரும் உருட்டைக்கட்டையால் தாக்கியதால் காயமடைந்தார். இதனால் சாலமன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி என்பது தொடர்பான சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. கடத்தப்பட்ட சாலமனின் நண்பர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின்பேரில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லதுரை உடனடியாக விரைந்து மதுரவாயலில் உள்ள குடோனில் இருப்பதைக் கண்டறிந்து 4 பேரை கைது செய்து, சாலமனை உயிருடன் மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதவி ஆய்வாளர் செல்லதுரை, நேற்றிரவு 10 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் என்ற தகவல் கிடைத்தவுடன், உடனே கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் எண்ணை அனுப்பி ரோந்து பணியில் ஈடுபட உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதனடிப்படையில் காரின் எண்ணை வைத்து ரோந்து காரில் தீவிரமாக தேடியபோது, மதுரவாயல் அபிராமி நகரில் அதே எண் கொண்ட கார் நிற்பதை கண்டுபிடித்ததாகத் தெரிவித்தார். பின்னர் காரின் பக்கத்தில் உள்ள ஒரு குடோனில் தாக்கும் அலறல் கேட்டவுடன் அங்கு எட்டிப்பார்த்த போது, நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குவதை கண்டவுடன் வெளிக்கதவை மூடியதாக உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பின்பு காவல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்து, காவலர்கள் வந்தவுடன் கதவை திறந்து நான்கு பேரை கைது செய்து சாலமனை உயிருடன் மீட்டதாக தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் வந்த 2 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை கைதுசெய்து, கடத்தப்பட்ட நபரை மீட்டதற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாக்கிடாக்கியில் தங்களை வெகுவாக பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது நேரில் அழைத்து கூடுதல் ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் வெகுமதி அளித்து பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார். 2 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கடத்திய நபரை மீட்ட சிஎம்பிடி ரோந்து காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரை மற்றும் ரோந்து வாகன ஓட்டுனர் காவலர் பூங்காவனம் ஆகியோரை காவல் ஆணையர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com