முகமூடி...விக்...ஸ்ப்ரே... யூடியூபை நம்பி சோலோவாக இறங்கிய கொள்ளையன் - சிக்கியது எப்படி?

முகமூடி...விக்...ஸ்ப்ரே... யூடியூபை நம்பி சோலோவாக இறங்கிய கொள்ளையன் - சிக்கியது எப்படி?
முகமூடி...விக்...ஸ்ப்ரே... யூடியூபை நம்பி சோலோவாக இறங்கிய கொள்ளையன் - சிக்கியது எப்படி?
Published on

யூடியூப் வீடியோக்களை பார்த்து சமையல் செய்வதைப்போல், நகைக்கடையில் கொள்ளையடித்து காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார் டீக்காராமன். ஒற்றை ஆளாய் அவர் 15 கிலோ நகைகளை திருடியது எப்படி? 

சிங்க முகமூடி... சிகையை மறைக்க விக்... சிசிடிவியை மறைக்க ஸ்பிரே என ஹாலிவுட் சினிமா பாணியில் கெட்டப்பை மாற்றிய கொள்ளையன், வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 15 கிலோ தங்கத்தை திருடிய சம்பவம் மாநிலத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது.

கொள்ளையடித்தது எந்த கும்பலோ? எத்தனை பேரோ? என விசாரணையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர், 5 நாட்களாக போராடி ஒரே ஒரு ஆளை கைது செய்திருக்கிறார்கள். அவர்தான் டீக்காரமன். பள்ளிகொண்டாவை அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர். ஒற்றை ஆளாய் ஒரு நகைக்கடையில் திருடியது எப்படி என விசாரித்தபோது, டீக்காராமன் சொன்ன தகவல்கள் அதிகாரிகளை மிரள வைத்திருக்கின்றன.

சொகுசாக வாழ ஆசைப்பட்ட டீக்காராமனுக்கு பெரிய கொள்ளை சம்பவத்தை செய்து வாழ்வில் செட்டிலாகிவிடவேண்டும் என்பதுதான் லட்சியம். அதற்காக நீண்ட நாட்களாக பல திட்டங்களை தீட்டிய அவர், இறுதியில் நகைக்கடையில் திருடுவது என முடிவு செய்திருக்கிறார். அப்போது, அவர் தேர்வுசெய்த இடம்தான் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர் உதவிக்கு கூட்டாளிகள் யாரையும் உடன் வைத்துக் கொள்ளவில்லை. அவர் முழுக்க முழுக்க நம்பியது யூடியூப் எனும் வீடியோக்கள் பதிவேற்றப்படும் வலைத்தளத்தை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது காவல்துறை. கடைக்கு உள்ளேயும், வெளியேயும் நீண்ட நாட்களாக நகைக்கடையை நோட்டம்விட்ட டீக்காராமன், பின்புறம் உள்ள சுவரை துளையிட்டு உள்ளே செல்ல முடிவு செய்தார். சத்தம் வராமல் சுவரை துளையிடுவது எப்படி என யூடியூப் வலைத்தளத்தில் உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டபின், 15ஆம் தேதி நள்ளிரவு சுவரை துளையிட்டு உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

அதற்காக 10 நாட்களை எடுத்துக்கொண்ட அவர், காவலாளிகளுக்கு தெரியாமல் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக சுவரை துளையிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி தங்கத்தை எப்படி உருக்குவது என யூடியூபில் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்ட டீக்காராமன், அதற்கான மூலப் பொருட்களையும் இயந்திரங்களையும் வாங்கி வைத்துள்ளார்.

அடையாளங்களை மறைத்து திருடிய நகைகளை, ஆளில்லா சுடுகாட்டில் புதைத்து வைத்துவிட்டால், யாராலும் தன்னை கண்டுபிடிக்க முடியாது என தப்புக்கணக்கு போட்ட டீக்காராமனை மடக்கி பிடித்திருக்கிறது தனிப்படை. சிங்க முகமூடிபோல், கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்கள் அணியும் பிபிஇ கிட், ஃபேஸ் ஷீல்டு உள்ளிட்டவற்றை அணிந்து இவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யூடியூப் பார்த்து திருடுவது எப்படி என கற்றுக்கொண்ட டீக்காராமனுக்கு, கம்பி எண்ணுவது எப்படி என கற்றுக்கொடுக்க சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது காவல்துறை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com