வண்ணாரப்பேட்டை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 செல்போன்கள், லேப்டாப், இருசக்கர வாகனங்கள், கத்திகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்துவருபவர் செல்வம். இவர் கடந்த 13 ஆம் தேதி சென்னை மூலக்கொத்தளம் பாலம் கீழ் உள்ள ஓட்டல் அருகில் கையில் செல்போன் வைத்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 வழிப்பறி கொள்ளையர்கள் செல்வத்தின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் பறிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக சம்பவம் நடந்த இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்த போலீசார் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பவர் சூர்யா, சிவா, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திலீப் என்ற தீலீப்குமார் என்று கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த 3 வழிப்பறி கொள்ளையர்களையும் செங்குன்றம் பகுதியில் வைத்து போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 13 செல்போன்கள், 1 லேப்டாப், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 கத்திகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யா என்ற பவர் சூர்யா, சிவா ஆகிய இருவர் மீதும் திருவள்ளூர், சோழவரம் காவல் நிலையங்களில் சுமார் 10 திருட்டு வழக்குகளும், தீலீப்குமார் மீது செங்குன்றம் மற்றும் திருவள்ளூர், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் 3 திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.