செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
சென்னையைச் சேர்ந்தவர் அஜ்பூர் ரஹ்மான். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகியான இவர், ஆந்திராவில் இருந்து பசு மாடுகளை கண்டெனர் லாரியில் விற்பனைக்காக பொள்ளாச்சிக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது, வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில், வாணியம்பாடியைச் சேர்ந்த முன்னாள் இந்து மகாசாப நிர்வாகியான ஜெகன் என்பவர் தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் மணியரசு ஆகியோருடன் சேர்ந்து மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி தடுத்து நிறுத்தி, "இறைச்சிக்காக மாடுகள் கொண்டு செல்லப்படுகிறதா?" என தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
இதையடுத்து பணம் கேட்டு அவர்கள் மூவரும் மிரட்டியதாக கண்டெய்னர் லாரி ஓட்டுநர் செந்தில்குமார் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக அம்பலூர் காவல்துறையினர் இந்து மகாசபா முன்னாள் நிர்வாகி ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், மணியரசு ஆகியோரை கைது செய்து, அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், கன்டெய்னர் லாரியில் தண்ணீர் வசதி மற்றும் காற்று வசதி இல்லாமல் பசு மாடுகளை சித்திரவதை செய்வது போல் கொண்டு சென்றதாக ஓட்டுனர் செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்து லாரியில் இருந்த மாடுகளை திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் உள்ள கோசலையில் பராமரிக்க அனுப்பி வைத்தனர்.