ரவுடி ஆக வேண்டும் என்ற ஆசையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகளை கைதுசெய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட மேலமடை சுடுகாடு பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களோடு சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து, மேலமடை மயானப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது மயானத்தின் அருகில் உள்ள வேப்பமரம் அருகில் 10க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரை கண்டதும் ஓடி ஒளிந்த நிலையில், நான்கு பேரை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பவித்திரன், மேலமடை அரவிந்த்குமார், அஜித்கண்ணன், சோலைமலை என்பது தெரியவந்தது.
இதில் அஜித்கண்ணன் மற்றும் சோலமலை ஆகியோர் ரவுடி ஆக வேண்டும் என்ற ஆசையில் சாலையில் செல்லும் சில இளைஞர்களிடம் பயங்கர ஆயுதங்களை காட்டித் தகராறு செய்ததோடு, சிலரை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள பாண்டியராஜன், அரவிந்த்குமார் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி, கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து நான்கு பேரையும் கைதுசெய்த காவல்துறையினர் 5 அரிவாள்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி ஆக வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை தாக்கி ஆயுதங்களோடு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.